150வது பதிவு- சில சந்தோசங்கள்?  

Posted by: என். உலகநாதன் in , , ,

ஒவ்வொரு முறையும் பிள்ளைகளின் வருட விடுமுறைக்கு எங்கு செல்வது? என்று முடிவு எடுப்பதற்குள் எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கும். போன வருடமும் அப்படித்தான். பிள்ளைகளுக்கு பரிட்சை முடிந்து ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என்பதில் எங்களுக்குள்ளே ஏகப்பட்ட மாற்றுக் கருத்துக்கள். எங்கள் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். மூன்று அக்கா. ஒரு தங்கை, இரண்டு தம்பிகள். என்னையும் சேர்த்து எங்கள் பெற்றோருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். இரண்டு சித்தப்பாக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட பிள்ளைகள். நான்கு அத்தைகள் அவர்களுக்கும் நிறைய பிள்ளைகள். சித்தப்பா, அத்தை பிள்ளைகளுக்கும், ஏன் அக்காக்களின் பிள்ளைகளுக்கும் கூட கல்யாணம் ஆகிவிட்டது. எல்லோருமே நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருக்கின்றார்கள்.

என் பெரிய அக்காவின் பையன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். வருடம் ஒரு முறை இந்தியா வந்து செல்வான். அவன் குழந்தைகள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். அக்காவின் பெண்ணை லண்டனில் ஒரு டாக்டருக்கு கட்டிக்கொடுத்து இருக்கிறார். இருவருக்கும் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது அக்காவிற்கு இரண்டுமே பெண் பிள்ளைகள்தான். ஒருத்திக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இரண்டாமவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது அக்காவிற்கு ஏகப்பட்ட குழந்தைகள். இரண்டு ஆண், இரண்டு பெண். இரண்டுமே ரொம்ப குறும்பு. வால்கள்.

அடுத்து நான். எனக்கும் இரண்டு பிள்ளைகள். அடுத்து உள்ள தங்கைக்கு மூன்று பிள்ளைகள். முதல் தம்பி காதல் கல்யாணம். அவனுக்கும் மூன்று பிள்ளைகள். அவன் கனடாவில் உள்ளான். அவனும் மனைவியுடனும், குழந்தையுடனும் வருடத்திற்கு ஒரு முறை வந்து செல்வான். கடைசி தம்பி அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனுக்கும் இரண்டு பிள்ளைகள்.

இதைத்தவிர சித்தாப்பாவின் பேரக் குழந்தைகள், அத்தையின் பேரக்குழந்தைகள் என வீடு நிறைய குழந்தைகள். நான் 10ஆம் வகுப்பு படிக்கும் வரை நாங்கள் கூட்டுக்குடும்பத்தில்தான் இருந்தோம். பிறகு அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, வெவ்வேறு வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் இன்னமும் ஏதாவது குடும்ப விழா என்றாலோ இல்லை தீபாவளி, பொங்கல் என்றாலோ அனைவரும் எங்கள் வீட்டில்தான் ஆஜர். எல்லோருக்குமே எங்கள் அப்பா அம்மாதான் தலைவன், தலைவி மாதிரி. அனைத்து முடிவுகளுமே அப்பாத்தான் எடுப்பார். அவர் சொல்லுக்கு அனைவருமே கட்டுப்படுவார்கள்.

எங்கள் குடும்பம் மற்றும் சொந்தக்காரர்களின் குடும்பங்கள் கூட மிக நல்ல நிலையில் உள்ளனர். எல்லோருமே நல்ல மகிழ்ச்சியுடனும் நிறைய சொத்து சுகங்களுடன் உள்ளனர். ஊரில் உள்ளவர்கள் எல்லோருமே எங்கள் குடும்பங்களை பார்த்து ஆச்சர்யப்படுவதுண்டு. அந்த அளவிற்கு புண்ணியம் செய்தவர்கள் நாங்கள்.

அதனால்தான் போன வருட விடுமுறைக்கு முன்பு, விடுமுறைக்கு எங்கு செல்வது என்று குழம்பி தவித்தோம் என்று முதல் பத்தியில் சொல்லியிருந்தேன். விடுமுறைக்கு எங்கே, யார் வீட்டிற்கு செல்வது? எங்கு சென்றாலும் ஒரே சந்தோசம்தான். அதனால்தான் முடிவு எடுக்க முடியாமல் தவித்தோம். பிறகு ஒரு வழியாக எல்லோரையும் எங்கள் வீட்டிற்கே வரவைக்கலாம் என முடிவெடுத்தோம். உள்நாடு, வெளிநாடு என அனைவருக்கும் போன் செய்து வரவைத்தோம்.

எல்லோரையும் சேர்த்தால் 100 பேருக்கு மேல் வரும். அனைவருக்கும் சமைப்பது என்பது இயலாத காரியம். அதனால் ஒரு சமையல்காரரை விடுமுறை முடியும் வரை சமைக்க நியமித்தோம். எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஒரு மாதமும் ஒரே கூத்தும் கும்மாளமும்தான். படம் பார்த்தோம். சீட்டு விளையாடினோம். வயலுக்குப் போனோம். கோவில்களுக்கு போனோம். பத்தாததுக்கு என் மனைவியின் தங்கை குடும்பமும் சேர்ந்து கொண்டது. " இது போன்ற சொந்தம் கொண்டதால் இறைவா வா நன்றி சொல்கிறோம்" என்று பாடி மகிழ்ந்தோம்.

எங்கு போனாலும் பஸ்ஸில்தான் போவோம். பஸ் என்றால் அரசுப் பேருந்து இல்லை. ஒரு மாதத்திற்கு ஒரு பஸ்ஸையே வாடைக்கு வாங்கிவிட்டோம். ஊரே ஆச்சர்யப்பட்டு எங்களை பார்த்தது. பணம் நிறைய செலவு செய்யப்பட்டது. யார் செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு எல்லோரிடமுமே நிறைய பணப்புழக்கம்.

அனைவரும் சேர்ந்து ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தோம். நிறைய அனாதை குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் நிறைய உதவிகள் செய்ய தீர்மானித்து அதன்படி செய்து வருகிறோம். அம்மா, அப்பாவிற்கு நிறைய சந்தோசம். இதுபோல் எப்போதும் எல்லோரும் சந்தோசமாக இருக்க வாழ்த்தினார்கள். நாங்கள் எல்லோரும் அவர்களிடம் ஆசிர்வாதம் அதாவது நமஸ்காரம் பண்ணி முடிக்கவே இரண்டு மணி நேரம் ஆனது. பிறகு ஒரு வழியாக விடுமுறை முடிந்து அவரவர் இல்லம் நோக்கி புறப்பட்டு வந்து விட்டொம். இனி அடுத்த விடுமுறைக்குத்தான் இந்த சந்தோசம் கிடைக்கும்.

நீங்கள் அனுபவித்த சந்தோசத்தை ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள்? என்கின்றீர்களா? விசயம் இருக்கிறது.

**********************************************************

மேலே சொன்னமாதிரி அனைவரின் வாழ்க்கையும் சந்தோசமாக அமையவேண்டும் என்றுதான் எங்கள் கொள்ளு தாத்தாவோ அல்லது எங்கள் தாத்தாவோ அல்லது எங்கள் அப்பாவோ வாழ்க்கையை ஆரம்பித்து இருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்ன உறவு முறைகள் வேண்டுமானால ஒரு சில உண்மையாக இருக்கலாம். ஆனால் சந்தோசங்கள்....????? ஒரு வேளை அடுத்தப் பிறவியில் அவர்கள் அனைவருக்கும் கிடைக்குமோ????

அப்படியென்றால் அனைத்தும் உண்மை இல்லையா? அப்படி என்ன சோகங்கள் என்று கேட்கின்றீர்களா?

என்னுடைய பதில் இதுதான்:

ஏன் இருக்கின்ற மெகாத்தொடர்களின் சோகங்கள் போதாதா உங்களுக்கு?


என் வலது கண் துடித்தது!  

Posted by: என். உலகநாதன் in , ,

சிறு வயதில் யார் என்னிடம் இப்படிச் சொன்னார்கள் என்று எனக்கு நினைவில்லை. ஆனால், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ரொம்ப பீடிகை போட விரும்பவில்லை. விசயம் இதுதான். ஆண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது நடக்கும் என்றும், வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும் என்றும், பெண்களுக்கு அப்படியே ரிவர்ஸ்ல நடக்கும் என்றும் என்னிடம் யாரோ சொல்லி விட்டார்கள். சொன்னது யார்? என்ற சிந்தனைக்கு செல்ல நான் விரும்பவில்லை.. ஒரு பாட்டுல கூட கண்ணதாசன் எழுதியிருப்பார். கதாநாயகி இப்படி பாடுவாள், "என் வலது கண்ணும் துடித்தது, உன்னை........"

சகுனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை நம்பாமல் வாழ்வது ரொம்ப நல்லது. நம்ப ஆரம்பித்து விட்டோமானால் நம்மை அது உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். ஜாதகம் பார்ப்பதோ, இல்லை ஜோசியம் பார்ப்பதோ நம் நாட்டில் மட்டும் உள்ள பழக்கமாகவே நான் நினைக்கிறேன். எந்த ஐரோப்பியன் அல்லது அமெரிக்கன் ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்து கொள்கிறான். நாம்தான் எல்லாவற்றையும் பார்க்கிறோம். இப்போது லேட்டஸ்டாக வாஸ்து .....

இந்த கண் துடிக்கும் சமாச்சாரம் என்னை பொருத்தவரை உண்மை என்றே நான் நினைக்கிறேன். என் வீட்டில் இது வரை நடந்த அனைத்து மரணங்களின் போதும் என் வலது கண் விடாமல் ஒரு வாரம் துடித்திருக்கிறது. அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் சொல்லி இருக்கிறேன். அதே போல் நான் கனவில் காணும் சில நிகழ்வுகளும் அப்படியே நடந்துவிடுகின்றன். அப்படியே என்றால் அப்படியே அல்ல. ஓரளவு அப்படியே. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. கல்யாணத்திற்கு முன் (அப்படியே வைத்துக்கொள்வோமே- இப்போது அல்ல) வந்த நடிகைகள் சம்பந்தப்பட்ட கனவுகள் மட்டும் நடக்கவே இல்லை. என்ன ஒரு ஓர வஞ்சனை பாருங்கள் இந்த கனவிற்கு!

மீண்டும் விசயத்திற்கு வருகிறேன். இது சம்பந்தமாக என் நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம். அந்த நண்பர் இதுபோன்ற நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும் இந்த கண் துடிக்கும் சமாச்சாரத்தை போய் அவர் மனைவியிடம் சொல்லி இருக்கிறார். அவர் இந்த மாதிரி விசயங்களில் நம்பிக்கை அதிகம் உள்ளவர். நண்பரின் மனைவிக்கு ஒரு முறை தொடர்ந்து இடது கண் துடிக்க அவர் பயந்து போய் நண்பரிடம் சொல்ல அவர் கடுப்பாகி விட்டார். தொடர்ந்து ஒரு வாரம் அவருடைய கண் துடிக்கவே தினமும் இந்தியாவுக்கு போன் செய்து எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள? என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார். முடிவில் நண்பர் வெறுத்துப் போய் மனைவியை டாக்டரிடம் அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் கண்ணில் ஒன்றும் கோளாறு இல்லை என்று சொல்லி, எதற்கும் இந்த ஐ டிராப்ஸை கண்ணில் விடுங்கள் என்று சொல்லி நிறைய பீஸ் வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார்.

ஆனால், எனக்கு அப்படி இல்லை. எனக்கு வலது கண் துடித்தால் நிச்சயம் ஏதாவது ஒரு கெட்ட விசயம் நடக்கிறது அல்லது காதுக்கு வருகிறது. இது ஏன் எனக்கு மட்டும் நடக்கிறது என்று தெரியவில்லை. ஏதாவது மருத்துவ காரணங்கள் இருக்கிறதா? என்றும் தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த விசயத்திற்கு வருகிறேன். பத்து நாட்களுக்கு முன் ஒரு நாள் என் வலது கண் துடிக்க ஆரம்பித்தது. அதனால் நான் மிகுந்த ஜாக்கிரதை ஆனேன். அன்றைய தினம் குடும்பத்தோடு 'அசல்' படம் சென்றேன். மிகவும் ஜாக்கிரதையானவன் ஏன் அந்த படத்திற்கு சென்றேன் என்கின்றீர்களா? அந்த ஊரில் வேறு எந்த தமிழ் படமும் ஓடவில்லை. தியேட்டருக்கு சென்று டிக்கட் புக் செய்துவிட்டு ஒரு தமிழ் கடைக்கு சென்று மளிகை சாமான் வாங்கலாம் என்று போய் கடையில் வண்டியை நிறுத்தினேன். பின்னால் வந்த ஒரு மலாய் பெண்மணி தன்னுடைய காரால் என்னுடைய காரின் பின்புறம் மோதிவிட்டார். நன்கு கவனிக்கவும். நின்ற வண்டியில் மோதிவிட்டார். காரிலிருந்து இறங்கி திட்டலாம் என்று போனால், அவர் கண்களெல்லாம் கலங்கி நான் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு உடனே ஓடிவிட்டார். இந்த சம்பவத்திற்கு அப்புறம் வலது கண் துடிப்பது நின்றுவிடும் என நினைத்தேன். நிற்கவில்லை. அட்லீஸ்ட் 'அசல்' படம் பார்த்தபிறகாவது நிற்கும் என நினைத்தேன். அப்படியும் நிற்கவில்லை.

அடுத்த நாள் ஊருக்கு போன் செய்தால் உறவினர் ஒருவரின் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என செய்தி வந்தது. தொடர்ந்து துடித்துக்கொண்டே இருந்தது. தினமும் நானும் என் நண்பரின் மனைவியைப் போலவே தினமும் போன் செய்து அனைவரின் உடல்நிலையும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

சென்ற வாரம் ஒரு கனவு கண்டேன். வலது கண்ணும் துடித்துக்கொண்டே இருந்தது. கனவு கண்டால் பலிக்கும் பட்சத்தில், அதை உடனே வெளியில் சொல்லி விட்டால், கனவு பலிக்காது என்று ஒருவர் சொன்னதால் அம்மாவிற்கு போன் செய்தேன். " அம்மா, இனி பாத்ரூம் செல்லும்போது கவனமாக நடந்து செல். முக்கியமாக இரவில். வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது பாத்ரூமில்தான். அதுவும் இல்லாமல் டைல்ஸ் வழுக்கும், அதனால் அதிக கவனம் தேவை" என்று மேம்போக்காக பயத்தை ஏற்படுத்தாமல் கூறினேன்.

அதற்கு அம்மா, " நான் எப்போதும் மிகுந்த கவனமாகத்தான் இருப்பேன். இனி இன்னும் கவனமாக இருக்கிறேன்" என்று கூறினார். அப்போதும் என் வலது கண் துடித்துக்கொண்டுதான் இருந்தது.

அம்மாவிற்கு போன் செய்த அடுத்த நாள் ஊரிலிருந்து போன் வந்தது. என் வயதான சித்தப்பா பாத்ரூம் டாய்லட்டில் வழுக்கி விழுந்து அவரின் ஒரு கால் பேஸினின் உள்ளே சென்று, தோல் கிழிந்து, தசை கிழிந்து, பிறகு கதவை உடைத்து அவரை தூக்கி ஆஸ்பத்திரி சென்று, அன்றே ஆப்பரேசன் செய்து, இப்போது அவர் ஆஸ்பத்திரியில். அவருக்கு வயது 76 இருக்கும். ஆஸ்பத்திரியைவிட்டு அவர் வர இன்னும் 15 நாட்கள் ஆகலாம். ஆஸ்பத்திரி செலவுகள், கதவு ரிப்பேர் செலவுகள், டாய்லெட் ரிப்பேர் செலவுகள்........

விசயத்தை கேட்டவுடன் உடனே என் வலது கண் துடிப்பது நின்று விட்டது. இப்போது சொல்லுங்கள், வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும் என்ற என் நம்பிக்கை சரியா அல்லது தவறா?


மாமரம் - சிறுகதை  

Posted by: என். உலகநாதன் in ,

ஒன்பது வருடங்களுக்கு முன் என் நண்பர் ஆர்.பாலசுபரமணியன் எழுதிய கதை இது. ஆபீஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியை வைத்து எழுதினார். என்னிடம் படித்துப்பார்த்து விட்டு கொடுக்கும்படி கூறினார். நான் திருப்பித்தரவில்லை. சென்ற வாரம் ஏதோ தேடிக்கொண்டிருக்கையில் இந்தக் கதை கிடைத்தது. நண்பர் இப்போது சவுதி அரேபியாவில் வேலைசெய்கிறார். அவரிடம் தொடர்பு கொண்டபோது இந்தக் கதையை என் பிளாக்கில் வெளியிடுமாறு கூறினார். அதனால் நான் மீண்டும் டைப் செய்து இங்கே வெளியிடுகிறேன். கதையைப் பற்றிய நிறைகுறைகளை பின்னூட்டமூலமாகவோ அல்லது அவரின் மெயிலுக்கோ தெரிவிக்கலாம். அவரின் மெயில் ஐடி: ramana_bala@hotmail.com

இனி கதை:

தொலைவிலிருந்து வரும்போதே வீட்டை மறைத்துக் கொண்டு இருந்தது மாமரம். மாமரம் என்பதற்காக மாங்காய்கள் காய்க்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது போல் இருந்தது அந்த மரம். பசிய இலைகளும், செந்தளிர்களுமாக வளப்பமாக நின்று கொண்டிருந்தது. எல்லா மரங்களையும் போல இதுவும், சில பறவை இனங்கள் தங்கி போவதற்கும், கூடு கட்டவும் பயன் பட்டுக்கொண்டிருந்தது. இந்த மரத்தை வெட்ட ஆள் கூப்பிட்டு வரும்படி என் மனைவி அடிக்கடி கூறிக்கொண்டிருந்தாள். வெட்டப் பிடிக்காததால், மற்ற அலுவல்களுக்கு முக்கியம் கொடுத்து, வசதியாக மறந்து போய் கொண்டிருந்தேன்.

இந்த வீட்டிற்கு குடி வந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகியிருந்தது. நகரில் மரத்துடன், எல்லா வசதிகளுடன் அமைந்த வீடு கிடைப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் மனைவிக்கும் முதலில் இந்த வீடு பிடித்ததற்கு காரணம் வாசலில் இருந்த மாமரம்தான். ஓஹோ என்று வளர்ந்து வானம் பிடிக்க நிற்கவில்லை என்றாலும் கூட, தரையில் வெயில் விழாமல் குடை பிடித்துக் கொண்டிருந்தது மரம். அதனால் இதையே காரணமாக கூறி என் மனைவி இந்த மரத்தை வெட்டச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ஒரு கீரை, பூ செடி வைக்க முடிகிறதா? வெயில் இல்லாமல் எப்படி வளரும்?"

ஒரு ஓய்வு நாளில் இப்படி ஆரம்பித்த பேச்சு நாளுக்கு நாள் வலிமை கூடிக்கொண்டே இருந்தது.

" ஒரே இலையாக விழுகிறது, பெருக்கி மாளவில்லை, சிவப்பு கட்டெறும்பு கூட்டம் கூட்டமாக மரத்தில் குடியிருக்கிறது. எப்ப கடித்து வைக்குமோ" என்பதாக போய்க் கொண்டிருந்தது.

இந்த வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே பக்கத்து வீட்டுப் பெண், இந்த மரத்தை காய்க்கவே காய்க்காத மரம் என்று கூறியிருக்கிறாள். நானும் இதை முன்னமே அறிந்திருந்தேன். இதற்கு முன் இந்த வீட்டில் குடியிருந்தது என் நண்பர்தான். அவ்வப்பொழுது இங்கு வந்து போயிருக்கிறேன்.

அன்று அவர்களுடைய இந்த வீட்டில், ஒரு மாலைப் பொழுதில், டீ அருந்திக்கொண்டிருந்தோம். ஊரெல்லாம் மாமரங்கள் காய்த்துக் கொண்டிருக்க, கண்கள் இந்த மரத்தில் அவற்றை தேடின.

"என்ன, இந்த மரத்தில், ஒரு பூ. சின்ன பிஞ்சு கூட இல்லை?"

வார்த்தைகள்தாம். கேட்ட பிறகுதான் அந்த கேள்வியின் முட்டாள்த்தனம் எனக்கு உறைத்தது. குழந்தை செல்வம் இல்லாத என் நண்பர் வீட்டில் இந்த அசந்தர்ப்பமான சொற்கூட்டம் எத்த்கைய வேதனையை ஏற்படுத்தியிருக்கும்?. அது வரையில் நன்றாக அனுபவித்து பேசி டீ குடித்துக் கொண்டிருந்த கணங்கள் சட்டென்று காணாமல் போய்விட்டன. என் நண்பருக்கும், அவர் மனைவிக்கும் காயத்தை என் கேள்வி ஏற்படுத்தியிருந்தது. அண்றைய பேச்சு, அதற்கு பிறகு உப்பு சப்பில்லாமல் அவசரமாக முடிந்து போய் விட்டது. வீட்டிற்கு வந்த பிறகும், என் மனம் என்னையே திட்டிக்கொண்டிருந்தது. இதனாலேயே, இந்த வீட்டீகு வந்தவுடன், இந்த மரத்தின் காய்க்காத தன்மையைப் பற்றி என் மனைவியிடம் நான் சொல்லவே இல்லை.

ஏதோ ஒரு நாள் ஊரிலிருந்து என் மனைவியின் உறவினர் வந்திருந்தார். கோடையில் காற்று பற்றி எரியும் கரிசல் காட்க்காரர் அவர். மாமரத்தையும் அதன் குளிர்ந்த நிழலையும் ஐம்புலன்களாலும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

" மாப்பிள்ளை, ஒரு மரம் பத்து டன் ஏ.சிக்கு சமமான குளிர்ச்சித் தரும்"

ஏதோ ஒரு முறையில் மாப்பிள்ளையாகியிருந்த எனக்கு, எவ்வளவு பெரிய மரம், எந்த வகை மரம், இவ்வளவு குளிர்ச்சியைத் தரும் என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. இது என் மனைவியின் காதுகளில் விழுகிறதா என்று மட்டும் அறிந்து கொள்ள ஆவலாயிருந்தது.

அன்று அலுவலக வேலையின் தீவிரத்தில் அமிழ்ந்து போயிருந்த எனக்கு, என் மனைவியிடமிருந்து ஃபோன் வந்தது.

"தேனீ மரத்தில் கூடு கட்டியிருக்கு. எனக்கு பயமாக இருக்கு. இன்னைக்காவது ஆட்களை கூட்டி வாருங்கள்"

"தேனீ ஒன்னும் பண்ணாது"

" என்னைக் கொட்டினால் பரவாயில்லை. உங்கள் குழந்தையை கொட்டி வைத்தால் உங்களுக்கு தாளாதே என்றுதான்"

என் குழந்தை நடுவில் திருப்பு சீட்டாக நின்று கொண்டிருந்தது.

" சரி, நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேன்". டொக்கென்று வைக்கப்பட்ட ஃபோன் அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருந்திருக்க வேண்டும்.

அலுவலக வேலை முடிந்த கையுடன் புறப்பட்டு, யாரைக் கூப்பிட்டு இந்த மரத்தை வெட்ட சொல்வது என்ற யோசனையுடன் வீடு வந்து கொண்டிருந்தேன். மரத்தில் தேனீ இருந்த அடையாளமே இல்லை. " எல்லாம் ஓடிப் போச்சுங்க" என்றபடி வந்து நின்றாள் என் மனைவி. எப்படி என்று நானும் கேட்கவேயில்லை.

அன்று இரவு என் மனைவியும், குழந்தையும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக, சத்தமில்லாமல் கதவை திறந்து மரத்திடம் வந்து நின்றேன்.

"மரமே! நீ கொஞ்சம் பூத்து ஒரு சில பிஞ்சுகளையாவது பிரசவித்துவிடேன்" . வாய் திறந்து, யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்த பிறகு அதனிடம் கூறிக் கொண்டிருந்தேன். பெரிய ஜே.கே. என்று நினைப்பா மரம் காய்த்து விடுவதற்கு என்று என் மனம் கிண்டலடித்தது. காய்க்காத முருங்கை மரத்திற்கு செருப்படி கொடுத்தால் காய்க்கும் என்று எங்கேயோ படித்த ஞாபகம் இப்போழுது வந்து தொலைத்தது. மனிதனுக்கு உபயோகமில்லாத பொருட்களுக்கு என்னவெல்லாம் நேருகிறது. கறவை சக்தி இழந்த பசுக்கூட்டம் லாரி லாரியாக வெளி மாநிலம் போவதற்கும் இது தானே காரணம்.

என் நண்பர் இந்த வீட்டை காலி செய்த அன்று அவர்களுக்கு நான் உதவி செய்து கொண்டிருந்தேன். எல்லா சாமான்களையும் லாரியில் ஏற்றியாகிவிட்ட பிறகு என் நண்பரும் அவர் மனைவியும் எங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தனர். சிறிது கலங்கிய கண்களுடன் அவர் மனைவி, " உங்கள் மனைவியிடம் இந்த மரத்திற்கு தினமும் கண்டிப்பாக தண்ணீர் விடச் சொல்லுங்கள். இந்த மரம் கண்டிப்பாக காய்க்கும்". கண்டிப்பாக என்னை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் அவ்வாறு கூறவில்லை. அவர் வேதனை இந்த மரமும் படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து கூறுவது போல இருந்தது. தொலைவில் திரும்பிய காரிலிருந்து என் நண்பரின் மனைவி இந்த மரத்திற்கு தனியாக கை காட்டிக் கொண்டிருந்தது போல தோன்றியது.

இந்த கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் ஒரு பூவையோ, வடுவையோ கூட இந்த மரம் பிறப்பித்து விடவில்லை. பருவங்கள் மாறி இலைகளையெல்லாம் கொட்டத் தொடங்கியிருந்தது மரம்.

" எவ்வளவு குப்பை. இதையெல்லாம் கூட்டி பெருக்க எனக்கு தெம்பில்லை. காலையில் பெருக்கி முடிந்ததும் மாலையில் மறுபடியும் சேர்ந்து எழவெடுக்கிறது இந்த மரம். வெட்டி தொலைக்கவும் மாட்டேன் என்கிறீர்கள்"

இனிமேலும் தள்ளிப் போட்டு கொண்டிருக்க முடியாது. இல்லயென்றால் தினம் வீட்டில் சண்டை வெடிக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை பக்கத்து வீட்டில் அரிவாள் வாங்கி நிறைய கிளைகளை வெட்டிக் கழித்துவிட்டேன். முழுவதும் வெட்டிவிட என் மனம் இடம் தரவில்லை. இப்போதிக்கு இது போதும். சம்மர் க்ராப் வெட்டிக்கொண்ட பள்ளி சிறுவனை போல இருந்தது மரம்.

மரங்களும், மாடுகளும் மாத்திரம்தான் உபயோகமில்லாமல் போகின்றனரா என்ன? சக மனிதர்களும் கூட அவ்வளவாக உபயோகமில்லாமல் போகின்றனர். எங்களுடையது ஒரு தனியார் நிறுவனம். அவ்வப்பொழுது எடுக்கப்படும் அதிரடி மாற்றங்களில் இந்த முறை நான் அதிகப்படியான ஆளாக நிர்வாகத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். காய்ப்பு குறைந்ததோ, காய் சிறுத்ததோ இல்லை பழம்தான் புளித்ததோ தெரியவில்லை. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் படி மூன்று மாத அறிவிப்பில் என்னுடைய இருப்பிற்கு அவசியமில்லை என்று நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொண்டது நிர்வாகம். அவ்வளவு சுலபமாக ஒருவரை வேலையிலிருந்து போகச் சொல்ல முடியுமா? என்று கேட்பவர்கள் அரசாங்க வேலையிலோ அல்லது யூனியன் அரவணைப்பிலோ இருக்கக் கூடும். இந்த மூன்று மாத காலத்திற்குள், வேறு வேலை தேட வேண்டிய நிஜம் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் அலுவலக ஆணையை காண்பித்தேன். நிகழ் காலம் குறித்த கவலையுடன் அவள் ஸ்தம்பித்து போயிருந்தாள். மெளனமாக நின்று கொண்டிருந்தது மரம்.

இந்த வீட்டை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் காலி செய்ய வேண்டியிருக்கும். அடுத்தது இந்த வீட்டிற்கு யார் குடிவரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்காவது நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும், மரமும் பூத்துக் குலுங்க வேண்டும் என்றும் விரும்பியது மனம்.